“ ‘அறம்’ படத்தில் நடப்பது நிஜத்தில் சாத்தியமா?” - அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்

இயக்குநர் கோபி நயினார் எழுதி இயக்கி, நயன்தாரா நடிப்பில் திரைக்கு வந்திருக்கும் `அறம்' திரைப்படம், பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ஐ....

இயக்குநர் கோபி நயினார் எழுதி இயக்கி, நயன்தாரா நடிப்பில் திரைக்கு வந்திருக்கும் `அறம்' திரைப்படம், பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ஐ.ஏ.எஸ் அதிகாரி மதிவதனியாக வாழ்ந்திருக்கும் நயன்தாரா, அரசியல்வாதிகள் எழுப்பும் தடைகளுக்கு நடுவிலும் மக்கள்நலனில் அக்கறை செலுத்துகிறார்.  `Democracy is not merely a form of Government. It is essentially an attitude of respect and reverence towards fellowmen' என்னும் சட்டமேதை அம்பேத்கரின் வார்த்தைகளை அழுத்திச் சொல்லிவிட்டு எழுந்து நடக்கும் மதிவதனியைக் கொண்டாடுகிறார்கள் மக்கள்.

உண்மைத்தன்மை என்ன? `அறம்' - யதார்த்தமா... மிகையான கற்பனையா என்பதை அறிந்துகொள்ள, இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரைச் சந்தித்தோம்.

“வெளிப்படையா பேட்டிகொடுக்க, அரசாங்கத்திடம் ரிப்போர்ட் கொடுக்கணும்” என்று கூறி பெயர் குறிப்பிடாமல் பேட்டிகொடுக்க ஒப்புக்கொண்ட அவர், “அரசாங்கத்தோட பாலிசிகளை நடைமுறைப்படுத்தும் கருவிதான் நாங்க. எங்களுக்கு இருக்கும் வரம்புக்குள்ள மக்களுக்கு சேவை செய்றதுக்கும் வாய்ப்புகள் உண்டு. `அறம்' திரைப்படத்துல வர்ற மாதிரி தண்ணீர் திருடிட்டு போற லாரியைப் பறிமுதல் பண்ணி, தேவையான மக்களுக்கு ஏதாவது ஒருமுறையில விநியோகம் பண்ணலாம்தான். ஆனா, எழுத்துபூர்வமா அரசுக்கு எழுதி, அரசின் ஒத்துழைப்போடுதான் அதைத் தொடர்ந்து செய்ய முடியும்.”

அரசியல்வாதிகள் தலையீடு பற்றிக் கேட்டபோது, “தலையீடுகளெல்லாம் பொருட்படுத்தாம தன்னோட கடமையை நேர்மையா செஞ்சா டிரான்ஸ்ஃபர் வேணும்னா கிடைக்கலாம். அற்ப விஷயங்களுக்காகவெல்லாம் சஸ்பெண்ட் பண்ண மாட்டாங்க. சஸ்பென்ஷன் என்பது அரிதிலும் அரிது.''

“நீங்கள் நடைமுறைப்படுத்தும் கொள்கைகளை (எடுத்துக்காட்டாக, தண்ணீர் தொடர்பான அரசின் கொள்கைகள்) மக்கள் ஒப்புக்கிறாங்களான்னு பார்த்து நடந்துக்கிறதும் நேர்மையான அம்சம்தானே?''

“இருக்கலாம். மக்கள்கிட்ட எதிர்ப்பு இருந்தா அரசுக்குத் தெரிவிக்கணும், அவ்ளோதான். மற்றபடி கொள்கையை மாத்துறது எல்லாம் எங்க வரம்புக்குள் இல்லை” என்று வரம்புக்குள் சிரிக்கிறார்.

மாணவர் ஃப்ரெடெரிக் ஏங்கல்ஸ்லட்சியத்துடன் அரசுத் துறைக்குள் நுழைந்து தன்னுடைய வரம்பை விரைவாகப் புரிந்துகொண்டதாகச் சொல்லும் இவருக்கும், ஆட்சிப்பணித் தேர்வுகளுக்காகப் படிக்கும் மாணவருக்குமான இடைவெளியைப் புரிந்துகொள்ள, தனியார் ஐ.ஏ.எஸ் அகாடமியில் படிக்கும் ஃப்ரெடெரிக் ஏங்கல்ஸ் என்கிற மாணவரைச் சந்தித்தோம்...

“ ‘அறம்' மாதிரியான  படங்களைப் பார்த்துதான் ஐ.ஏ.எஸ் ஆகணும்னு ஆசையே வந்துச்சு. அதுமட்டுமல்லாம, சைலேந்திரபாபு மாதிரியான ஆபீஸர்ஸைப் பற்றிப் படிக்கிறப்போ, அதிகாரத்துக்குள்ள போனா பெரிய மாற்றமில்லைன்னாலும், ஒரு சின்ன மாற்றமாவது பண்ண முடியும்னுதான் நான் ஐ.ஏ.எஸ்-க்குப் படிக்கிறேன்” என்கிறார்.

“படத்துல நயன்தாரா ராஜினாமா பண்ணிடுறாரே!”

“இந்த அமைப்புக்குள்ள சிறு மாற்றங்களைச் செய்ய முடியும் என நம்புறேன். முடிஞ்ச அளவுக்கு மோதிப்பாப்போம்” என்கிறார்.

ஒருபக்கம் குறுகிய காலத்துக்குள்ளாகவே வரம்புகளைப் புரிந்துகொண்ட இளம் அதிகாரி, மறுபக்கம் லட்சியக்கனவோடு தீவிரமாகப் படிக்கும் ஐ.ஏ.எஸ் ஆஸ்பிரன்ட். இவர்கள் இருவருக்கும் வருங்காலத்தில் எப்படியான அனுபவங்கள் காத்திருக்கக்கூடும் என்பதைத் தெரிந்துகொள்ள, கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்து ஓய்வுபெற்ற கிருஸ்துதாஸ் காந்தி ஐ.ஏ.எஸ்-ஸைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

“ஐ.ஏ.எஸ் அதிகாரிகளோட வரம்பு என்ன. அவங்களால சுதந்திரமா செயல்பட முடியுமா?''

“சுதந்திரமாகவெல்லாம் செயல்பட முடியாதுங்க. அதுமட்டுமில்லை, எனக்குத் தெரிஞ்சு சுதந்திரமா செயல்பட முடியலைன்னு அன்றும் சரி, இன்றும் சரி யாரும் வேலையைவிட்டுப் போனதைப் பார்க்கலை. பெரும்பாலானவங்களுக்கு இது ஜாப் செக்யூரிட்டி இருக்கிற அரசுவேலை, அவ்ளோதான். அதை அவங்க இழக்க மாட்டாங்க. ஏதாவது சிக்கல்ல சிக்கிட்டு மீள முடியாமப்போயிருப்பாங்களே தவிர, வெளியிலிருந்து பார்க்கிறவங்க ஊதிப் பெருக்குற மாதிரிலாம் இல்லை.

கலெக்டர் பதவியேயானாலும், அவங்க அரசின் ப்யூன்கள், அவ்வளவுதான். இப்ப திருநெல்வேலியில், அந்தக் கந்துவட்டிக்கு எதிரா கார்ட்டூன் போட்டதுக்கு  எஃப்.ஐ.ஆர்-லாம் ஃபைல் பண்ணாங்களே! நல்ல விஷயம்.  கந்துவட்டிக் கும்பலுக்கு எதிரா நடவடிக்கை எடுக்க முடிஞ்சுதா? எல்லோரும் சகாயத்தைப் பற்றிச் சொல்வாங்க. அவரால் பி.ஆர்.பி விஷயத்துல அறிக்கைதான் கொடுக்க முடிஞ்சது. அதுக்குமேல ஒண்ணும் செய்ய முடியாது. அவர் நேர்மையா இருக்கார் அவ்ளோதான். சில தனிநபர்களோட நேர்மையை மட்டும் வெச்சிக்கிட்டு மக்களுக்கு நல்லது செஞ்சிட முடியாது.”

“அதிகாரிகள் நினைச்சாலும் நல்லது செய்ய முடியாதுன்னு சொல்றீங்களா?''

“விதிவிலக்குகள் அங்கொண்ணு இங்கொண்ணுனு இருக்கலாம். ஏன், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்துல கலெக்டருங்கதான் எஸ்.சி மக்களுக்கு நிலம் இல்லைனு பஞ்சமி நிலத்தைக் கொடுத்தாங்க. இன்னிக்கு அப்படில்லாம் ஒரு கலெக்டர் முடிவெடுக்க முடியாது.''

“படிச்ச அதிகாரிகள், படிக்காத அரசியல்வாதிகளைவிட மக்களுக்கு கூடுதலா நல்லது செய்யலாம்கிற கருத்து தப்புன்னு சொல்றீங்களா?''

“நல்லது செய்யுறதுக்கும் படிப்பறிவுக்கும் நேரடியா சம்பந்தம் இல்லைன்னு சொல்றேன். அறிவுங்கிறது சமூகத்துக்குப் பயன்படணும். படிக்கிறது மட்டும் அறிவு கிடையாது. இதுவரைக்கும் சுதந்திர இந்தியாவுல ஒரு நல்ல திட்டத்தை இந்த அதிகாரிகள் டிசைன் பண்ணிருப்பாங்களா? காமராஜர் மதிய உணவுத் திட்டம் கொண்டுவந்தார், எம்.ஜி.ஆர் அதைத் தொடர்ந்தார். அதிகாரிகள் என்ன கொண்டுவந்தாங்க? படிச்சவன், படிக்காதவங்கிறதுலாம் ஒரு விதியே கிடையாது.''


“அதிகாரிகளோட வரம்பைப் புரிஞ்சுக்க முடியுது. அப்படின்னா, அரசியல்வாதிகளால்தான் மக்களுக்கு நல்லதைச் செய்ய முடியும்னு நினைக்கிறீங்களா?''

“ஒரு காலத்துல இருந்திருக்கலாம். இப்ப அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் கூட்டுச்சேர்ந்து வேலைபாக்குறாங்க. அவங்களுக்கு நடுவுல பிரச்னைகளே வர்றதில்லை. நல்லதோ, கெட்டதோ ரெண்டு பேரும் சேர்ந்துதான் செய்ய முடியும். அவங்களுக்குப் பெருசா ஏதும் பிரச்னை வர்றதில்லை. பங்கு                

பிரிச்சுக்கிறாங்க. ஆக, இப்போதைக்கு ரெண்டு பேர் பக்கமும் நின்னு பேச முடியாது. இது மக்களுக்குப் புரியணும்.''

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About