கோடிகளைக் குவிக்கும் குடிநீர் வியாபாரம்!

டாஸ்மாக் மூலம் ‘தண்ணி’யை விற்பதன் மூலம் நமது மாநில அரசாங்கம் பல ஆயிரம் கோடிகளைச் சம்பாதிக்கிறது. கேன்களில் குடிநீர் அடைத்து விற்பதன் மூலம் ...

டாஸ்மாக் மூலம் ‘தண்ணி’யை விற்பதன் மூலம் நமது மாநில அரசாங்கம் பல ஆயிரம் கோடிகளைச் சம்பாதிக்கிறது. கேன்களில் குடிநீர் அடைத்து விற்பதன் மூலம் தனியார் நிறுவனங்கள் பல நூறு கோடி ரூபாயைச் சம்பாதித்து வருகின்றன. இன்றைய தேதியில்,
மினி பஸ் செல்லாத குக்கிராமங்களில்கூட குடிநீர் கேன்கள் சென்றுவிட்டன. கேன்களில் அடைக்கப்பட்ட தண்ணீரைக் குடிப்பதே உடல் நலத்துக்குப் பாதுகாப்பு என்கிற எண்ணம் நகர்ப்புறத்து மனிதர்களிடம் மட்டுமல்ல, கிராமத்து மனிதர்களின் ஆழ்மனதிலும் மறக்க முடியாத அளவுக்கு விதைக்கப்பட்டுள்ளதால், கோடிகள் புரளும் பிசினஸாக மாறியிருக்கிறது குடிநீர் வியாபாரம்.

சென்னையில் உள்ள வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (MIDS - Madras Institute of Development Studies) சார்பில் பொதுமக்களின் குடிநீர் பயன்பாடு குறித்து ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் குடிசையில் வசிக்கும் மக்கள்கூட, சுகாதாரமான தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கருதுவதாகத் தெரிய வந்திருக்கிறது. குடிசைவாசிகள் தங்களது அன்றாட வருமானத்தில் 20 சதவிகிதத்தைக் குடிநீர் வாங்க செலவழிப்பதாகவும் அந்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. கேன் குடிநீர் குடிப்பவர்கள் எல்லாம் மேல்தட்டு மக்கள் என்ற நிலைமாறி, இன்று குடிசை வீட்டில் வசிப்பவர்களும் கேன் குடிநீரைக் குடிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

போதிய அளவு மழை இல்லை; குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டுவிட்டன; அரசுத் தரப்பில் குடிநீர் விநியோகம் செய்வது குறைந்து வருவது; அரசுக் குடிநீரைக் குடித்தால், உடல்நலமில்லாமல் போவது; (சென்னையில் சில இடங்களில் குடிநீர்க் குழாயில்  சாக்கடைத் தண்ணீர் வருவது வாந்தி வரவைக்கும் கொடுமை!) கேன்களில் அல்லது பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரைக் குடிப்பதற்கு இப்படி எத்தனையோ காரணங்கள் கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டிருக்கிறது. பாக்கெட் தண்ணீரைப் பருக ஆரம்பித்த நம் மக்கள், இன்றைக்குக் கேன் தண்ணீரை வாங்கிக் குடிக்க அஞ்சுவதே இல்லை.

சராசரியாக ஒரு குடும்பத்துக்குத் தினமும் ஒரு கேன் குடிநீர் மட்டுமாவது வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒரு குடிநீர் கேன் 30 முதல் 40 ரூபாய்க்கு வாங்குகின்றனர். சராசரியாக மாதம் ஒன்றுக்கு ரூ.1,200 செலவு செய்ய வேண்டிய கட்டாயம் இப்போது ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் கடந்த 17 ஆண்டுகளாகக்  குடிநீருக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுதான் கேன்களில் அடைக்கப்பட்ட குடிநீர் கனஜோராக விற்பனையாவதற்கு முக்கியக் காரணம். ஆரம்பத்தில் பிஸ்லரி உள்ளிட்ட சில தனியார் நிறுவனங்கள் மட்டுமே பாட்டிலில் குடிநீரை அடைத்து விற்றன. தமிழகத்தில் குடிநீர் விற்பனையில் இறங்கிய முதல் நிறுவனம் டீம் மினரல் வாட்டர். இவர்கள் 32 வருடங்களாகச் சந்தையில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் நிலத்தடி நீர்வளம் அதிகமுள்ள இடங்களைச் சுற்றிக் குடிநீர் ஆலைகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. ஆரம்பக் காலத்தில்  70 குடிநீர் ஆலைகள் தமிழகத்தில் இருந்தன. அப்போது ஐ.எஸ்.ஐ சான்று பெற வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் எல்லாம் வரவில்லை. சில குடிநீர் நிறுவனங்கள் சுகாதாரமற்ற குடிநீர் வழங்குவதாகப் புகார் எழுந்தபோது, 2004-ம் ஆண்டு முதல் ஐ.எஸ்.ஐ சான்றிதழ் பெறுவதை இந்திய தர நிர்ணய நிறுவனம் கட்டாயமாக்கியது.

இப்போது தமிழகம் முழுவதும் ஐ.எஸ்.ஐ சான்று பெற்ற 1,400-க்கும் மேற்பட்ட குடிநீர் ஆலைகள் செயல்படுகின்றன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மட்டும் 425 குடிநீர் ஆலைகள் உள்ளன. கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 100 குடிநீர் ஆலைகள் தமிழகம் முழுவதும் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன. இப்போதும் புதிதாகக் குடிநீர் ஆலை தொடங்குவதற்காக அனுமதி கேட்டு 260 விண்ணப்பங்கள், சென்னையில் உள்ள இந்திய தர நிர்ணய நிறுவனத்தின் மண்டல அலுவலகத்தில் வரிசையாகக் காத்துக் கிடக்கின்றன.

பொதுவாக, குடிநீர் ஆலைகளில் தினந்தோறும் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் லிட்டர் குடிநீரை சவ்வூடு பரவல் முறையில் (Reverse Osmosis) சுத்திகரிக்கின்றனர். இந்த பிராசஸைச் சுருக்கமாக, தண்ணீரை ஆர்.ஓ  செய்வது என்பார்கள். கடந்த மார்ச் மாதத்திலிருந்து 1.40 கோடி லிட்டர் முதல் 1.60 கோடி லிட்டர் வரை குடிநீர் விற்பனையாகி இருக்கிறது. கோடையில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பதால்,  2 கோடி லிட்டர் வரை குடிநீர் விற்பனையாகி இருக்கலாம் என்கிறார்கள்.  சென்னையில் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுவதால், வழக்கத்தைவிட 30% அதிகமாகவே குடிநீர் விற்பனையாகி இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

குடிநீர் வியாபாரத்தில் மளிகைக் கடைக்காரர்கள், சிறு வியாபாரிகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்கிய 20 லிட்டர் கேன் ஒன்றை, வாடிக்கை யாளர்களுக்கு 20 ரூபாயில் இருந்து 40 ரூபாய் வரை விற்கின்றனர். கோடை காலத்தில் அவர்களுக்குக் குடிநீர் வியாபாரத்தில் இருந்து கணிசமான லாபம் கிடைக்கிறது. சென்னையில் மட்டும் சிறிய, பெரிய பிராண்ட்கள் என 100 நிறுவனங்கள் குடிநீர்  வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கின்றன. சென்னையில் மட்டும் ஆண்டுக்கு ரூ.18 கோடி அளவுக்குக் குடிநீர் வர்த்தகம் நடக்கிறது.

குடிநீர் ஆலைகள் அமைப்பது சாதாரண காரியமல்ல. நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதற்கான அனுமதி, சுற்றுச்சூழல் அனுமதி, உணவுத் துறையின் அனுமதி, இந்திய தர நிர்ணய நிறுவனத்தின் தரச் சோதனை ஆகிய முக்கியமான விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அதன் பின்னர்தான் குடிநீர் ஆலையை நடத்த முடியும். இதில் ஏதாவது ஓர் அனுமதி கிடைக்காவிட்டாலும் குடிநீர் ஆலையை நடத்த முடியாது. இந்தத் தொழிலின் இன்றைய நிலை குறித்து, தமிழ்நாடு பேக்கேஜ்டு குடிநீர் நிறுவனங்களின் அசோசியேஷன் செயலாளர் சுரேஷ்குமாருடன் பேசினோம்.

“குடிநீரின் தரத்தை மேம்படுத்த என்னென்ன விதிமுறைகள் இருக்கிறதோ, அத்தனை விதிமுறைகளையும் அமல்படுத்துகிறோம். நாங்கள் உற்பத்தி செய்யும் தண்ணீர், தரமான குடிநீர்தானா என்பதை அறிய அதை முதலில் நாங்களே குடித்துச் சோதிக்கிறோம்.  தண்ணீர் குடிக்கும் அளவுக்குத் தரமாக இல்லை எனில், அதை விற்பனை செய்வதில்லை.

குடிநீர் ஆலைகள் பெரும் அளவு லாபம் அடைகின்றன என்கிற பொதுவான கருத்து உள்ளது. நிலத்தடி நீரை நம்பித்தான் குடிநீர் ஆலைகள் தொடங்கப்படு கின்றன. எனவே, இப்போதிருக்கும் 1,400 நிறுவனங்களும் 100% அளவுக்குக் குடிநீரை உற்பத்தி செய்வதில்லை. தொடர் வறட்சி காரணமாகக் கடந்த சில ஆண்டுகளாக நிலத்தடி நீர் கிடைப்பதில்லை. இதனால் 80% அளவிலான குடிநீர் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. 20% நிறுவனங்களே லாபத்தில் இயங்குகின்றன.

ஒரு குடிநீர் நிறுவனம் ஒரு நாளைக்கு 10,000 ரூபாய் வருமானம் ஈட்டும். மாதத்துக்கு அதிகபட்சமாக ரூ.2.50 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை கிடைக்கும். சில நேரங்களில் நாள் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் மட்டும்தான் கிடைக்கும். வேறு தொழிலில் இருப்பவர்கள், குடிநீர் நிறுவனத்தையும் சேர்த்து நடத்துகின்றனர்.

தமிழக அரசு அம்மா குடிநீர் பாட்டில்களை ரூ.10-க்கு விற்கிறது. மத்திய அரசு ரயில் நீர் என்ற பெயரில் ரூ.15-க்கு விற்கிறது. அரசு நிறுவனங்களோடு போட்டி போட்டுக்கொண்டு தனியார் குடிநீர் நிறுவனங்களும் விலையைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன” என்றார்.

குடிநீருக்கு ஐ.எஸ்.ஐ முத்திரை வழங்கும் இந்திய தரக் கட்டுப்பாடு நிறுவனத்தின் அதிகாரி பாலகிருஷ்ணனுடன்  பேசினோம். “குடிநீர் தரமானதா என்பதை அறிய நான்கு  விதமான சோதனைகள் செய்கிறோம். ஐ.எஸ்.ஐ முத்திரை தரப்பட்டபின், ஒரு நிறுவனம் தரமான குடிநீரைத்தான் தயாரிக்கிறதா என்பதைக் கண்டறிய அதிரடிச் சோதனைகள் மேற்கொள்வோம். கடைகளில் விற்கப்படும் குடிநீர் கேன்கள் அல்லது பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரை வாங்கிவந்து அதைச் சோதனைக்குட்படுத்துவோம். தரம் இல்லை என்று தெரிந்தால், அந்த நிறுவனத்துக்குத் தரப்பட்ட ஐ.எஸ்.ஐ முத்திரையை நிறுத்தி வைப்போம். பின்னர், மீண்டும் அந்த நிறுவனம் தரமான குடிநீரை உற்பத்தி செய்கிறதா என்று சோதனை நடத்தியபின்பே மீண்டும் ஐ.எஸ்.ஐ முத்திரை தருவோம். தரப்பரிசோதனையில் எந்தவிதச் சமரசமும் செய்வதில்லை” என்றார்.

சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியமே தண்ணீர் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. சென்னையில் உள்ள 38 தண்ணீர் நிரப்பும் இடங்களில் இருந்து 1,900 லாரிகளில் வீடுகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் தண்ணீரை விற்பனை செய்கிறது. 9,000 லிட்டர் குடிநீர்கொண்ட டேங்க் ஒன்று 600  ரூபாய்க்கு வீடுகளுக்கு விற்பனை செய்கிறது. இதே 9,000 லிட்டர் தண்ணீரை வணிகப் பயன்பாட்டுக்காக 765 ரூபாய்க்குத் தருகிறது.

“குடிநீர் நிறுவனங்களின் ஆதிக்கம் நாளுக்குநாள் அதிகமாகிறது. நீர் நிலை களுக்கு அருகில் நிலத்தடி நீர் எங்கு அதிகமாகக் கிடைக்கிறதோ, அங்குதான் குடிநீர் ஆலைகள் தொடங்குகின்றன. பல இடங்களில் நிலத்தடி நீரை உறிஞ்சி, பைப்கள் மூலம் ஆலைகளுக்குக் கொண்டுவந்து ஆர்.ஓ செய்கின்றனர். இதனால், எதிர் காலத்தில் வீடுகளில் போர்வெல்கள் வறண்டுபோகும் நிலை ஏற்படும். வறட்சியைப் பயன்படுத்தி அதிக அளவுப் பணம் சம்பாதிக்கும் ஆசை தான் அவர்களுக்கு இருக்கிறது. தண்ணீர் ஆலைகள் கணக்குவழக்கு இல்லாமல் நீரை உறிஞ்சுவதால், பூமியிலுள்ள நீர்த்தாங்கிகள் வற்றிப் போகும்.  இதனால், நம் எதிர்காலச் சந்ததி தண்ணீருக்குத் தரவேண்டிய விலை மிக மிக அதிகமாக இருக்கும்’’ என்று எச்சரித்தார் நீர் மேலாண்மை பொறியாளர் பிரிட்டோ ராஜ்.

மருத்துவம், கல்வி போல நல்ல குடிநீரை மக்களுக்குத் தருவது ஓர் அரசின் அடிப்படைக் கடமை. இந்தக் கடமையில் இருந்து அரசு தவறும்போது, தனியார் நிறுவனங்கள் புகுந்துவிடு கின்றன. அரசாங்கமே தன் கடமையில் இருந்து தவறும்போது, தனியார் நிறுவனங்களைக் குறைச்சொல்லி என்ன புண்ணியம்?


தமிழக அரசின் அம்மா குடிநீர்!

தமிழகம் முழுவதும் பேருந்து நிலையங்களில் பயணிகளுக்குக் குறைந்த விலையில் தரமான குடிநீர் தர வேண்டும் என்ற நோக்கத்துடன் 2013-ல் அம்மா குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் அம்மா குடிநீர் உற்பத்தி செய்யப்படுகிறது.   கும்மிடிப்பூண்டியில் உள்ள அம்மா குடிநீர் ஆலையில்  தினமும் சராசரியாக 1.30 லட்சம் முதல் 1.40 லட்சம் குடிநீர் பாட்டில்கள் தயாரிக்கப்படுகின்றன. ஒரு பாட்டில் குடிநீர் 10 ரூபாய் வீதம் விற்பனை செய்யப்படுகிறது. சாதாரண மக்கள் அம்மா குடிநீரை அதிகம் வாங்குவதால், அரசுக்கு லாபம்தான்!

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About