தோசை ₹10... மதிய உணவு ₹15... மூலிகை உணவு சாப்பிட சென்னையில் ஓர் இடம்!

ஒரு வேலையாக ரிப்பன் பில்டிங் செல்ல நேர்ந்தது. மதிய நேர உச்சி வெயில் சற்று அதிகமாக இருக்கவே பக்கத்தில் ஏதாவது கடை இருக்கிறதா எனக் கண்கள் தேட...

ஒரு வேலையாக ரிப்பன் பில்டிங் செல்ல நேர்ந்தது. மதிய நேர உச்சி வெயில் சற்று அதிகமாக இருக்கவே பக்கத்தில் ஏதாவது கடை இருக்கிறதா எனக் கண்கள் தேடின. ரிப்பன் பில்டிங் பின்புறம் உள்ள மாநகராட்சி அலுவலகம் அருகில் ஒரு கடை இருந்தது. அந்தக்
கடையின் பெயர் மூலிகை உணவகம் என் எழுதப்பட்டிருந்தது. கடையில் சென்று தாகம் தீர்க்கும் பானம் இருக்கிறதா என விசாரித்தபோது, மூலிகை மோர், மூலிகை தேநீர் என எல்லாம் மூலிகை மயமாக இருந்தது. எல்லாம் விலை ஐந்து ரூபாய் என்பது மற்றொரு ஆச்சர்யம். உள்ளே உணவகத்தினுள் சென்றால் சாப்பாடு, ஆவாரம்பூ சாம்பார், முடக்கத்தான் ரசம், மூலிகை மோர் எனப் பட்டியலும் மூலிகை மயமாக காட்சியளித்தது. மதிய சாப்பாடு 15 ரூபாய்தான் என்பது இன்னும் ஆச்சர்யம். சென்னையில் குறைந்தது 50 ரூபாயாவது இருந்தால் மட்டுமே பசியாற முடியும் என்ற நிலை இருக்கும்போது இது சாத்தியமா என்ற எண்ணம் வரவே மூலிகை உணவகத்தின் பணம் வசூலிக்கும் மேலாளரிடம் விசாரித்தோம். அவர் "எங்க கடையோட ஓனர்கிட்ட கேளுங்க" என்று அவரின் செல்போன் எண்ணைக் கொடுத்தார்.

மூலிகை உணவகம்

உணவகத்தின் முன்னதாக தேநீர் கடை, மூலிகைப்பொடி விற்கும் பிரிவு என அனைத்தும் மூலிகைகளை அடிப்படையாகக் கொண்டுதான் இயங்கி வருகிறது. உணவகத்தின் உள்ளே வரிசை கட்டி காத்திருக்கின்றனர், மக்கள். அந்த அளவுக்கு கூட்டமாக இருந்தது. மறுபுறமோ பரபரப்பாக மக்கள் பசியாறி வெளியேறுகிறார்கள். மக்கள் கூட்டம் அலைமோதி களைக்கட்டுகிறது, மூலிகை உணவகம்.

உணவக உரிமையாளர் சித்த மருத்துவர் வீரபாபுவுடன் பேசினோம். "அனைத்து உணவு வகைகளும், இங்குத் தரமாகவும், விலை வீரபாபுகுறைவாகவும் கிடைக்கும். காலை உணவாகக் கருவேப்பிலை பொங்கல், ஆவாரம் பூ, துளசி, திணை அரிசி, சாமை அரிசி போன்ற இட்லி வகைகளும், தோசையில் முடக்கற்றான், தூதுவளை, கம்பு, கேழ்வரகு, கருவேப்பிலை, மணத்தக்காளி, பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, புதினா போன்ற தோசை வகைகளும் இங்குக் கிடைக்கும். இட்லி 5 ரூபாய்க்கும், தோசை 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மூலிகை உணவகத்தை ஆறு வருடங்களாக இந்த இடத்தில் நடத்தி வருகிறேன். ஆரம்பத்தில் என்ன விலை இருந்ததோ அதே விலைதான் இன்னும் நீடிக்கிறது. எவ்வளவு பொருள்கள் விலையேறியபோதும் என் உணவகத்தில் உணவு 15 ரூபாய்தான். அதனால்தான் மாறாத அதே மக்கள் கூட்டம் இன்றும் அதிகமாக இருக்கிறது. கூட்டம் அதிகம் இருந்தாலும் மக்கள் காத்திருந்து பசியாறுகிறார்கள். நாளுக்கு நாள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறதே தவிர குறையவில்லை. இதுதவிர, பிரண்டை, தூதுவளை, கொள்ளு, புதினா போன்ற துவையல் வகைகளையும், மூலிகை சூப் மற்றும் ரச வகைகளையும் சாப்பாட்டுடன் தருகிறேன். தோசை வகைகளில் முடக்கத்தான் தோசை கொத்தமல்லி சட்னி, வாழைக்காய் கூட்டு, பாரம்பர்ய குழாய் புட்டு என வரிசையாக அடுக்கிக் கொண்டே சென்றார். மக்களின் உடல் ஆரோக்கியம் காக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த உணவகத்தை விடாமல் நடத்தி வருகிறேன். நாம் உண்ணும் உணவுதான் மருதாக இருக்க வேண்டும். ஆனால், இப்போது பெரும்பாலோனோர் உணவு என்ற பெயரில் விஷத்தைச் சாப்பிடுகின்றனர். இப்போது மக்களிடம் உணவு குறித்த விழிப்பு உணர்வு பெருகி வருகிறது. இயற்கையால் இங்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை" என்றவர், தொடர்ந்தார்.

உணவகத்தின் அமர்ந்துள்ள மக்கள்

இங்கு இருக்கும் ஒவ்வொரு உணவிலும் ஏதோ ஒரு மூலிகை நிச்சயமாக இருக்கும். நம் நாட்டில் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பது சர்க்கரை நோயினால்தான். கணையத்தில் சுரக்கும் இன்சுலின் அளவு சீரற்று இருப்பதுதான் சர்க்கரை நோய்க்கு முக்கியமான காரணம். கணையம் ஆரோக்கியத்துடன் செயல்பட ஆவாரம்பூ பயன்படுகிறது. ஆவாரம்பூ இட்லி, ஆவாரம்பூ சாம்பார், ஆவாரம்பூ கொழுக்கட்டை என சர்க்கரையைக் கட்டுப்படுத்தி உடலுக்கு ஆரோக்கியத்தைத் தருகிறது. இதுதவிர தூதுவளை, புதினா, துளசி மற்றும் சிறுதானியங்களைப் பயன்படுத்தி கொழுக்கட்டை, புட்டு, துவையல் மற்றும் மூலிகை சூப்களும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கையாக விளையும் இம்மூலிகைகளை, இன்றைய சந்ததியினருக்கு ஏற்றாற்போல உணவில் சேர்த்து கொடுத்தால் நிச்சயம் விரும்பி எடுத்துக் கொள்வார்கள். பொதுவாக மூலிகைகள் என்றாலே பிடிக்காத சிறுவர்களுக்குக் கூட இம்மூலிகை உணவகம் கவர்ந்திருக்கிறது. ஆனால், உணவே மருந்தாக இருந்த காலம் மாறி இப்போது, மருந்துதான் உணவாக உட்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். முடிந்தவரை மூலிகைகளைத் தினசரி உணவில் எடுத்துக் கொள்வது நல்லது" என்றார்.

அதன்படி அந்த உணவகத்தில் மூலிகை உணவினை ருசி பார்த்தேன். மூலிகை மணத்தில் உணவு நன்றாகவே இருந்தது. வெறும் 15 ரூபாய்க்கு மூலிகை உணவு என்பது இன்றைய காலகட்டத்தில் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது என்ற ஆச்சர்யம் மட்டும் விலகவே இல்லை.

மேலும் பல...

1 comments

Search This Blog

Blog Archive

About