மோடிக்கு சைக்கிள் தவிர்த்து வேறு என்னவெல்லாம் பரிசாகத் தரலாம்? - ஒரு ஜாலி ஆய்வு!

உலகம் சுற்றும் பிரதமரான மோடிக்கு நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட் ஒரு சைக்கிளைப் பரிசாக அளித்திருக்கிறார். உள்ளூரில் சுற்றி வர மோடிக்கு சைக்...

உலகம் சுற்றும் பிரதமரான மோடிக்கு நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட் ஒரு சைக்கிளைப் பரிசாக அளித்திருக்கிறார். உள்ளூரில் சுற்றி வர மோடிக்கு சைக்கிள் பயனளிக்கும் என மார்க் நினைத்தாரோ என்னவோ? இப்படி சதா சர்வகாலமும் நமக்காக ரேடியோவிலும் ஃபாரீனிலும் உழைக்கும் மோடிக்கு உலகத் தலைவர்கள் என்னவெல்லாம் பரிசாகத் தரலாம்? லிஸ்ட் சின்னதுதான். படிச்சிடுங்க.

செல்ஃபி ஸ்டிக்:

'மதராசப்பட்டினம்' கொச்சின் ஹனிஃபாவின் நிஜ வெர்ஷன்தான் மோடி. கேமராவைப் பார்த்தாலே பிறவி மாடல் போல போஸ் கொடுக்கத் தயாராகும் மோடிக்கு செல்ஃபி ஸ்டிக்கை விட சிறந்த கிஃப்ட் இருக்க முடியுமா என்ன? 'மீ வித் மித்ரோன்' என்ற கேப்ஷனோடு ஆட்டோமேட்டிக்காக இன்ஸ்டாவில் போஸ்ட் ஆகும் நவீன தொழில்நுட்பத்தோடு கூடிய செல்ஃபி ஸ்டிக்கை கொடுத்தால் பசுவைக் கண்ட பி.ஜே.பிகாரராய் அகமகிழ்ந்து போவார்.

அலாரம் க்ளாக்:

பேய்க்குப் பிடித்த நேரமான மிட்நைட் 12 மணிக்குத்தான் இப்போதெல்லாம் புதிய இந்தியா பிறக்கிறது. சராசரியாக ஆறு மாதத்திற்கு ஒரு முறை புதிய இந்தியாவை பிறக்க வைக்கும் மத்திய அரசின் கடின உழைப்பை மிஞ்ச ஆளே இல்லை. இப்படி நேரங்காலம் தெரியாமல் உழைக்கும் மோடி அண்ட் கோவிற்கு பரிசாகத் தர எல்லா நாடுகளின் நேரத்தையும் காட்டும் அலாரம் க்ளாக் ஒன்றை பரிசாகத் தரலாம். இந்திய நேரப்படி சட்டங்கள் போடுவது போரடித்தால் கஜகஸ்தான் நேரப்படி சட்டங்கள் போட்டு விளையாடலாம்.

வார்ட்ரோப்:

'துபாய்ல எல்லாம் ஒருதடவை யூஸ் பண்ணதை இன்னொரு தடவை யூஸ் பண்ணமாட்டாங்களாம்' என்ற வைகைப் புயலின் தத்துவத்தைக் கனகச்சிதமாகக் கடைபிடிக்கிறார் மோடி. ஒரே ஒரு கோட் சூட்டுக்கே பத்து லட்சம் வரை செலவழிக்கும் அவர் மொத்தம் எத்தனை கோடி மதிப்புள்ள ஆடைகள் வைத்திருப்பார்? அவை அனைத்தும் பத்திரமாக இருக்க, பாச்சா உருண்டை போடப்பட்ட வார்ட்ரோப்களை யாராவது பரிசாகத் தந்தால் நலம்.

உலக உருண்டை:

'இந்தியப் பிரதமராக என் கால் படாத இடமே உலகத்தில் இருக்கக் கூடாது' என்ற உயரிய நோக்கத்தோடு மோடி செயல்படுவதால் அவர் டேபிளில் இருக்கும் உலக உருண்டையே தேய்ந்து போய்விட்டதாம். எனவே துண்டு துக்கடா நாடுகள், அவற்றில் இருக்கும் குட்டிக் குட்டித் தெருக்களைக் கூட பக்காவாக விவரிக்கும் வேர்ல்ட் மேப் ஒன்றை யாராவது பரிசளித்தால் மோடிக்கு வசதியாக இருக்கும். விட்டுப்போன நாடுகளுக்கு டூர் ப்ளான் செய்ய ஒரு ப்ளானரும் இலவச இணைப்பாகத் தரலாம்.

சொகுசு விமானம்:

ஆடிய டான்ஸரும் பாடிய சூப்பர் சிங்கரும் சும்மா இருப்பார்களா? பிரதமர் பதவி முடிந்த பிறகும் மோடி கண்டிப்பாக உலக நாடுகளை விசிட் செய்யத்தான் போகிறார். எனவே இப்போதே தொலைநோக்கு பார்வையோடு யோசித்து அவருக்கு ஒரு விமானத்தை பரிசளிக்கலாம். ஏற்கெனவே மல்லையா கடன் தொல்லையால் அவதிப்படுவதால் அவரிடம் விமானம் வாங்கலாம். விமானத்துக்கு விமானமும் ஆச்சு. கடன் தொல்லையும் தீர்ந்தாச்சு.

சோஷியல் மீடியா:

இதைவிட தி பெஸ்ட் கிஃப்ட்டை யாராலும் மோடிக்குத் தரவே முடியாது. 'மோடி ஒரு சூப்பர் ஹீரோ', 'மோடி தொட்டதெல்லாம் பொன்' என்பதை நிரூபிக்க அவரின் ரசிகர்கள் படாதபாடுபடுகிறார்கள். ஆனால் எவ்வளவு முயன்றாலும் கடைசியில் ஆடியன்ஸ், 'அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்' என்பதால் மனம் தளர்ந்து போகிறார்கள் அவர் ரசிகர்கள். இந்தக் குறையை நீக்கப் பேசாமல் ஃபேஸ்புக்கையே மோடிக்குப் பரிசாகத் தந்துவிட்டால்? ட்ரம்ப் தலைமையிலான அரசு இதற்கு உடனே ஆவன செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About