இவன் தந்திரன்-இயக்குனர் கண்ணனுக்கு எண்ணிலடங்கா லட்டுகளை கொடுத்து கவுரவிக்கலாம்!

படித்தவன் எறிகிற குண்டூசி, படிக்காதவன் எறிகிற கடப்பாரையை விடவும் பெரிய சேதத்தை ஏற்படுத்தும்! அதெப்படிய்யா? என்பவர்கள் ஒருமுறை ‘இவன் தந்திரன...

படித்தவன் எறிகிற குண்டூசி, படிக்காதவன் எறிகிற கடப்பாரையை விடவும் பெரிய சேதத்தை ஏற்படுத்தும்! அதெப்படிய்யா? என்பவர்கள் ஒருமுறை ‘இவன் தந்திரன்’ பார்த்தால், ஆமாய்யா ஆமாம் என்பார்கள். வெறும் 23 ஆயிரம் ரூபாயை ஏமாற்றிய மத்திய அமைச்சரின், உள் டிராயரை கூட உருவி விடுகிறான் படித்தவன். எப்படி என்பதுதான் இந்த படத்தின் படு சுவாரஸ்யமான திரைக்கதை! இதற்குள் என்ஜினியரிங் மாணவர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்தையும் கத்தி போல சொருகி கலகலக்க விட்டிருக்கிறார் டைரக்டர் ஆர்.கண்ணன். ‘வந்தான் வென்றான்’ கண்ணனாய்யா நீங்க? (சினிமாவுக்குள்ள எப்பவோ வந்திங்க… இப்பதான் வென்றீங்க! )

என்ஜினியரிங் படித்துவிட்டு உரிய வேலை கிடைக்காமல் மொபைல் கடை வைத்திருக்கிறார்கள் கவுதம் கார்த்திக்கும், ஆர்.ஜே.பாலாஜியும். மத்திய அமைச்சர் சூப்பர் சுப்பராயன் வீட்டிற்கு கேமிரா பொருத்தப் போகிற இடத்தில், தன் கருத்தாக இவர் முணுமுணுத்தது அவர் மச்சானின் காதில் விழ… வரவேண்டிய 23 ஆயிரத்தை கொடுக்காமல் அலைய விடுகிறான் அவன். அப்புறம்? படிச்ச மூளையாச்சே? தந்திரத்திலும் தந்திரமாக மந்திரியின் பணக் கிடங்கை படமெடுத்து யூ ட்யூபில் வெளியிடுகிறார் கவுதம். நாடே பற்றிக் கொள்கிறது. மந்திரி பதவியும் காலி. “என் சோலிய முடிச்சவனை கண்டுபிடிச்சு அவன் சோலிய முடிக்கணும்” என்று கிளம்புகிறார் மந்திரி சூப்பர் சுப்பராயன். எதிர்பார்த்த முடிவுதான் என்றாலும், அதை நோக்கி போகிற திரைக்கதையின் சுவாரஸ்யத்தில் மெய் மறந்து உட்கார்ந்திருக்கிறது தியேட்டர். வாவ்… ரிவிட்டை இப்படிதான்டா வைக்கணும்!

இதற்கு முன் எப்போதும் ஒட்டாத கவுதம் கார்த்திக்கின் முகமும் கலரும், முதன் முறையாக நம்மிடம் சினேகம் கொள்வதுதான் இந்த கதைக்கான அங்கீகாரம். படத்தில் காதல் இருக்க வேண்டுமே என்பதற்காக வைத்த மாதிரி இருக்கிறது. அந்த பகுதி இல்லாவிட்டாலும் கூட இந்தப்படம் முறையாக ருசித்திருக்கும். கவுதம் தன் காதலை சொல்கிற இடம் ரொம்ப புதுசு. மிக மிக நாகரீகமான அப்ரோச். அந்த ஸ்பாட்டில் மறுக்கப்படும் காதலை கூட, பெரிய மனுஷத்தனமாக புன்னகையோடு ஏற்றுக் கொள்ளும் கவுதம் நிஜமாகவே பிடித்தும் போகிறார்.

ஷ்ரத்தா நாள் ஒன்றுக்கு மூன்று பாட்டில் ஹார்லிக்ஸ் ஐட்டங்களை தின்று செரித்தாலொழிய பாஸ் மார்க் வாங்குகிற யோகம் இல்லை. நல்லவேளை… நடிப்பில் அவர் கண் மட்டும் தனியாக பேசிக் கவர்கிறது. இன்டர்வியூவில் இவர் பதில் சொல்கிற காட்சியையும், அவர் திரும்பி வந்து கவுதமை கட்டிக் கொள்ளும் காட்சியையும் மிக்ஸ் பண்ணி தருகிறார் எடிட்டர். அழகு!

நடிப்பில் எல்லாரையும் தூக்கி சாப்பிடுகிற அசுரானாக இருக்கிறார் சூப்பர் சுப்பராயன். வெறும் வில்லனின் முரட்டுத்தனம் மட்டுமல்ல, மிக சாமர்த்தியமாக கோர்ட்டில் வாதாடி ஜெயிக்கும் புத்திசாலித்தனத்திலும் கவர்கிறார் மனுஷன். தனக்கு புரியாமல் என்ஜினியரிங் பாஷையில் என்னென்னவோ சொல்லும் கம்ப்யூட்டர் குரூப்பிடம், ‘தமிழ்ல சொல்லுடா’ என்று பொங்குமிடத்தில் அப்ளாஸ் கிழிகிறது.

ஆர்.ஜே.பாலாஜி வழக்கம் போல லொட லொட. ஆனால் பல காட்சிகளில் மனம் விட்டு சிரிக்க முடிகிறது. என்ஜினியரிங் படித்தவர்களின் இன்றைய நிலைமையை பாலாஜி வாயால் கேட்டால், கனத்த சோகத்தையும் மீறி அவர்களே சிரிப்பார்கள்.

தமனின் இசையில் பாடல்களை ரிப்பீட் அடிக்கலாம். பிரசன்ன குமாரின் நேர்த்தியான ஒளிப்பதிவுக்கு ஒரு சபாஷ்.

‘ரெண்டாயிரம் நோட்ல சிப் இருக்கு தெரியும்ல?’ என்ற சுவாரஸ்யமான வதந்திக்குள்ளிருந்து ரெண்டு மணி நேர சினிமாவையே கண்டெடுத்திருக்கிறார் கண்ணன். படத்தில் லட்டுகளை வைத்து ஒரு லஞ்ச லாவண்ய பேரம் நடக்கிறது. அதையே மீண்டும் அப்ளை பண்ணினால் கூட,

இவன் தந்திரன் இயக்குனர் கண்ணனுக்கு எண்ணிலடங்கா லட்டுகளை கொடுத்து கவுரவிக்கலாம்!

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About