‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!' - வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ்

தமிழ் மொழியை வளர்க்கிறேன் என்று சொல்லியே தமிழ் உணர்வை மாண்டு போகச் செய்தவர்களே இங்கு அதிகம். ஆனால், குழந்தைகள் ஒருநாளும் பொய் சொல்லமாட்டார்...

தமிழ் மொழியை வளர்க்கிறேன் என்று சொல்லியே தமிழ் உணர்வை மாண்டு போகச் செய்தவர்களே இங்கு அதிகம். ஆனால், குழந்தைகள் ஒருநாளும் பொய் சொல்லமாட்டார்கள். அதனால்தான் குழந்தைகளை நோக்கியே எப்போதும் பயணிக்கிறேன்' என நெகிழ்கிறார் தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் துணைத் தலைவர் சகாயம் ஐ.ஏ.எஸ்.

சென்னை, மேடவாக்கத்தில் அமைந்திருக்கிறது திருவள்ளுவர் தொடக்கப் பள்ளி. நன்கொடை, ஆங்கில வழிக் கல்வி என எந்தவித அடையாளமும் இல்லாமல், தமிழ் மொழியில் மட்டுமே இங்கு கல்வி வழங்கப்படுகிறது. பாவலேறு பெருஞ்சித்திரனாரின் குடும்பத்தார் இந்தப் பள்ளியை நடத்தி வருகின்றனர். ஐந்தாம் வகுப்பு வரையில் செயல்படும் இந்தப் பள்ளியில் 27 ஆம் ஆண்டு தொடக்கவிழா நேற்று நடந்தது. பனங்கற்கண்டு கலந்த எலுமிச்சைச் சாறு, கடலை மிட்டாய்கள் நிறைந்த குட்டி கேன்டீன், இயற்கை முறை உணவுகளின் பயன்கள் என விழாவுக்கு வந்திருந்தவர்களை கவர்ந்து இழுத்தனர் மாணவர்கள். திருக்குறள் பாடல்கள், பாவேந்தர் பாடல்களுக்கான நடனங்கள் என நிகழ்ச்சியை செழுமைப்படுத்தியிருந்தனர் பள்ளி நிர்வாகிகள். ஒவ்வோர் ஆண்டும் இப்பள்ளியில் ஆண்டுவிழாவில் கலந்து கொள்வது சகாயம் ஐ.ஏ.எஸ்ஸின் வாடிக்கை.

அவர் பேசும்போது, "  எந்த ஒரு வளர்ந்த நாடும் தாய்மொழியை விடுத்து வேற்று மொழியை ஒருநாளும் கையில் எடுத்ததில்லை. நம் இந்தியாவிலேயே வடபகுதிகளில் அவரவர் தாய்மொழிக்கு அளிக்கும் மரியாதையை யாரும் ஆங்கிலத்துக்கு அளிப்பதில்லை. ஆனால், உலகத்திலேயெ அன்னிய மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து கல்வியை வியாபாரமாக்கிய பெருமை தமிழ்ச் சமூகத்தை மட்டுமே சேரும். ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக, அரசால் நாடு முழுவதும் பணியமர்த்தப்படுவதற்கான வாய்ப்பு எனக்கு அதிகம் இருக்கிறது. இருந்தபோதிலும் நான் இந்தி கற்கவில்லை. இந்தி மொழி எனக்குத் தெரியாது என்பதை வெளிப்படையாகவே சொல்வேன். இந்தி என்றாலும் ஆங்கிலம் என்றாலும் ஒருவருக்கு மொழி ஆற்றல் வேண்டும். ஆனால் அந்த மொழிகளின் மீது மோகம்தான் வரக் கூடாது. ஆங்கிலத்தின் மீதான ஆற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள். அந்த ஆற்றல் ஓர் அன்னிய மொழி மீதான கவர்ச்சியை குறைத்துவிடும்" என்றவர்,

" ஒருமுறை உத்தரபிரதேச மாநிலத்தில் தேர்தல் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்தேன். அப்போது அம்மாநில அதிகாரி ஒருவர் அந்தத் தேர்தல் குறித்து இந்தியில் எழுதப்பட்ட ஒரு கோப்பினை என்னிடம் நீட்டிக் கையெழுத்து கேட்டார். முழுவதுமாகவே இந்தியில் இருந்த அந்தக் கோப்பினை அந்த அதிகாரியிடம் திருப்பி அளித்து தமிழில் கொண்டுவரச் சொன்னேன். உடனே அவர், ' ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான உங்களுக்கு இந்தி தெரியாதா?' எனக் கேட்டார். ' ஆமாம், எனக்கு இந்தி தெரியாது. நான் பல்லாயிரம் ஆண்டு சிறப்பு வாய்ந்த தமிழ் மொழி பேசப்படும் தமிழ்நாட்டில் இருந்து வந்தவன். எனக்கு இந்தி தெரியாது' எனப் பெருமையாகவே கூறினேன். இதேபோல்தான் ஆங்கிலமும். நம்மை அடிமையாக வைத்திருந்த ஒரு நாட்டின் மொழிக்கு, சுதந்திரம் பெற்ற பின்னரும் அடிமையாகவே உள்ளோம். மதுரை மாவட்டத்தில் நான் ஆட்சியராகப் பணிபுரிந்து வந்த நேரம் அது. அந்த மாவட்டத்தின் மிகச்சிறிய கிராமம் ஒன்றில் மனுக்கள் பெற்றுவிட்டு விவசாயிகள், பெண்கள் என அத்தனை பேரையும் சந்தித்துவிட்டு, எப்போது போல் எனக்குப் பிரியமான குழந்தைகளைச் சந்தித்தேன்.

அந்த மாதிரியான சந்திப்புகளின்போது, குழந்தைகளிடம் ஆங்கிலத்தில் கேள்வி கேட்பது என்னுடைய வழக்கம். அங்கு வந்திருந்த அனைத்து குழந்தைகளிடமும் பெயர், தந்தையார் தொழில் என ஆங்கிலத்தில் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தேன். அப்போது தேவகி என்றொரு சிறுமியிடமும் அதே கேள்விகளைக் கேட்டேன். ‘மை நேம் இஸ் தேவகி. மை ஃபாதர் இஸ் வொர்க்கிங் இன் உரக்கடை’ எனப் பதில் கொடுத்தார். அந்த ஒரு நொடி மெய்சிலிர்த்து மாணவி தேவகியை பாராட்டினேன். தமிழ் மொழியை முழுக்க முழுக்க ஆங்கிலக் கலப்பால் கொலை செய்து கொண்டிருக்கும் இச்சமுகத்தில், ஆங்கிலத்தில் தமிழைக் கலந்து ஆங்கிலத்தையே கொலை செய்தாள் அந்தச் சிறுமி. இந்தி என்றாலும், ஆங்கிலம் என்றாலும் ஒருவருக்கு மொழி ஆற்றல் வேண்டுமே தவிர, அந்த மொழிகளின் மீது மோகம் கூடாது. மாற்று மொழிகளின் மீது ஆற்றல் வளர்த்துக் கொள்ளுங்கள். அந்த ஆற்றல் அந்நிய மொழியின் மீதான கவர்ச்சியைக் குறைத்துவிடும். தமிழ் மொழியை வளர்க்கிறேன் என்று சொல்லியே தமிழ் உணர்வை மாண்டு போகச்செய்தவர்களே இங்கு அதிகம். ஆனால் குழந்தைகள் அதுபோல் ஒருநாளும் பொய் சொல்லமாட்டார்கள். அதனால்தான் குழந்தைகளை நோக்கியே நான் எப்போதும் பயணிக்கிறேன். அவர்களிடம் தான் எதிர்காலம் இருக்கிறது. அவர்களுக்கு தாய் மொழியில் பயிற்றுவியுங்கள். ஆற்றல் நிறைந்து மிகச் சிறப்பாக வளர்வார்கள்’ என்றார் நெகிழ்ச்சியோடு.
 

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About