வெடி வைக்கும் வடிவேல்! துடிதுடிக்கும் ஷங்கர்! இம்சை அரசனின் ‘இம்சை’!

‘ஒனக்கு வந்தா ரத்தம்… எனக்கு வந்தா தக்காளி சட்னியா?’ தமிழ் கூறும் நல்லுலகத்தின் திருக்குறளாகிவிட்ட இந்த ரெண்டு வார்த்தைக்குள், அயோடக்ஸ், அன...

‘ஒனக்கு வந்தா ரத்தம்… எனக்கு வந்தா தக்காளி சட்னியா?’

தமிழ் கூறும் நல்லுலகத்தின் திருக்குறளாகிவிட்ட இந்த ரெண்டு வார்த்தைக்குள், அயோடக்ஸ், அனாசின் உள்ளிட்ட அத்தனை வலி நிவாரணிகளையும் குழைத்து அடித்த பெருமை வடிவேலுவுக்கு மட்டுமே உண்டு.

அதே டயலாக்கை அவருக்கே ரிப்பீட் அடிக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கிறது தமிழ்சினிமா. ஏன்? ‘இம்சை அரசன்’ வடிவேலு தரும் இம்சைகள் அப்படி. அதுவும் இந்தியாவே உச்சந்தலையில் வைத்துக் கொண்டாடும் டைரக்டர் ஷங்கர், வடிவேலுவிடம் சிக்கிக்கொண்டு தவிக்கிற கொடுமை இருக்கிறதே… வற்றிய குளம் நிரம்பி, வாளை மீனே துள்ளுகிற அளவுக்கு கண்ணீர் நிரம்பிய கண்றாவி அது!

வடிவேலுவுக்கு ஹீரோ அந்தஸ்தை கொடுத்த முதல் படம் இம்சை அரசன் 23 ம் புலிகேசி. ஏறத்தாழ ரஜினி படத்தின் ஓப்பனிங். அதே அளவுக்கு கலெக்ஷன் என்று இன்டஸ்ட்ரியையே திரும்பி பார்க்க வைத்த படம் அது. அதற்கப்புறம் சிம்புதேவன் இயக்கிய படங்களும் ஓடவில்லை. வடிவேலு தனிப்பட்ட முறையில் ட்ரை பண்ணிய இந்திரலோகத்தில் நா அழகப்பன், எலி மாதிரியான படங்களும் சர்வ நாசம் ஆனதுதான் மிச்சம். நடுவில் சில வருஷங்கள் வன வாசம் போயிருந்த வடிவேலு கத்திசண்டை படத்தின் மூலம் திரும்ப என்ட்ரி கொடுத்தும், துளி பிரயோஜனம் இல்லை.

அண்மையில் வந்த ‘மெர்சல்’ படத்திலும் கூட, வடிவேலுவின் பர்பாமென்ஸ் ஜீரோவுக்கும் மேலே. சில்லரைக்கும் கீழே.

இந்த உண்மைகள் எதுவும் புரியாத வடிவேலு, தான் டாப்பில் இருந்த நாட்களை இப்பவும் நினைத்துக் கொண்டு கொடுக்கிற இம்சைகள்தான் இந்த கட்டுரையின் மெயின் பகீர்.

ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் படம் எடுப்பதை நிறுத்தி பல வருஷங்கள் ஆகிவிட்டது. இந்த நிலையில் மீண்டும் அவரை அணுகிய டைரக்டர் சிம்புதேவன், “இம்சை அரசன் 23 ம் புலிகேசி படத்தின் பார்ட் 2 எடுக்கலாம்” என்று யோசனை கூற, ஷங்கரும் சம்மதித்தார். இவருடன் இணைந்து படத்தை தயாரிக்க முன் வந்தது லைக்கா நிறுவனம். சில பல பேச்சு வார்த்தைகளுக்குப் பின், வடிவேலுவுக்கு 3 கோடி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு ஒரு கோடி அட்வான்ஸ் வழங்கப்பட்டது. 2016 ம் ஆண்டுக்குள் படத்தை முடித்துவிடுவதாக திட்டம் போட்டார்கள்.

பூஜைக்காக ஒரு நாள் குறித்து விட்டு காலை எட்டு மணிக்கு வருவதாக ஒப்புக் கொண்டு கிளம்பினார் வடிவேலு. எட்டு மணிக்கெல்லாம் யூனிட்டே வந்து காத்திருக்க… பத்து மணி வரை அந்தப்பக்கமே வரவில்லை வடிவேலு. ‘ஷங்கர் சாரே வந்து காத்திருக்கார்’ என்று தகவல் போன பின்பும் நோ ரெஸ்பான்ஸ். 2.0 படத்தின் வேலைகளை போட்டுவிட்டு, வடிவேலுவுக்காக சுமார் மூன்று மணி நேரம் காத்திருந்தார் ஷங்கர். இப்படி முதல் நாள் ஷுட்டிங்கே முணுமுணுப்புடன் துவங்க, எவ்வித கோபத்தையும் காட்டிக் கொள்ளாமல் கிளம்பிப் போனாராம் ஷங்கர்.

அதற்கப்புறமும் படப்பிடிப்புக்கு வரவேயில்லை வடிவேலு. ‘கதையை முழுசா கேட்கணும். அதுல இதை மாற்றணும். அதை மாற்றணும்’ என்று சொல்லி சொல்லியே நாட்களை கடத்தி வந்திருக்கிறார். அதற்குள் வடிவேலும் வேறு வேறு படங்களில் நடிக்கக் கிளம்ப… சும்மாவே போனது நாட்கள். மறுபடியும் பேச்சு வார்த்தை துவங்கி வடிவேலுவை கொண்டு வர முயன்ற சிம்புதேவனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. ‘இன்னும் இரண்டு கோடி அதிகம் கொடுத்தால் வர்றேன்’ என்றாராம் வடிவேலு. எப்படியோ பேசி அந்த இரண்டு கோடியை ஒரு கோடியாக குறைத்து மேலும் கொஞ்சம் அட்வான்ஸ் கொடுத்து மீண்டும் படப்பிடிப்புக்கு நாள் குறித்திருக்கிறார்கள்.

ஈவிபி ஸ்டூடியோஸ், மற்றும் அடையாறில் இன்னொரு இடத்தில் செட் என்று இரண்டு செட்டுகள் போடப்பட்டன. இவ்விரண்டு செட்டுகளிலும் சேர்த்தே சுமார் ஆறு நாட்கள் மட்டும் நடித்துக் கொடுத்த வடிவேலு சொல்லாமல் கொள்ளாமல் ஊருக்கு போய்விட, படக்குழுவினருக்கு பேரதிர்ச்சி. ‘மியூசிக் டைரக்டர் ஜிப்ரான் பிடிக்கல. அவரை மாற்று. லிரிக் பிடிக்கல. அவரை மாற்று. கதையில் இந்த சீன் பிடிக்கல. அதை மாற்று’ என்று வடிவேலு தருகிற இம்சைகள் சிம்புதேவனை நிலைய குலைய வைத்துவிட்டதாம்.

நடுவில் ‘எம்.ஜி.ஆருக்கு ஜோடியா நடிச்ச வெண்ணிறாடை நிர்மலாதான் எனக்கு அம்மாவா நடிக்கணும்’ என்று அடம் பிடித்த வடிவேலுவை சமாளிக்க முடியாமல், நடிப்பதையே விட்டுவிட்டு வீட்டில் ஓய்வெடுத்து வந்த வெண்ணிறாடை நிர்மலாவை கமிட் பண்ணியிருக்கிறார்கள். தினப்படி 40 ஆயிரம் தந்தால் நடிக்கலாம் என்று சம்மதித்த அவருக்கு சில லட்சங்கள் கொடுக்கப்பட்டுவிட்டன. ஆனால் ஒரு நாள் கூட இருவரையும் வைத்து ஷுட்டிங் எடுக்க முடியவில்லையாம் சிம்புதேவனுக்கு.

வடிவேலுவுடன் நடிக்கும் நட்சத்திரங்கள் லிஸ்ட்டிலிருந்த கருணாஸ், கஞ்சா கருப்பு, யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன் பெயர்களையெல்லாம் அடித்து திருத்திய வடிவேலு, ‘இவனுங்க எவனையும் நான் கண்லயே பார்க்கக் கூடாது’ என்று கூறியதால், அந்த ஏரியாவிலும் யாரை பில்லப் பண்ணுவது என்று குழம்பிப் போன சிம்புதேவன், ஒரு நாள் ஷங்கரை சந்தித்து எல்லாவற்றையும் குமுறலோடு கொட்டித் தீர்த்தாராம்.

இவர் சொல்வதற்கு முன்பே எல்லா இம்சைகளையும் கேள்விப்பட்டிருந்த ஷங்கர், வடிவேலுவை தொடர்பு கொள்ள முயன்று அதுவும் தோல்வியில் முடிய… சில தினங்களுக்கு முன் தயாரிப்பாளர் சங்கத்திற்கு நேரடியாகவே வந்துவிட்டாராம்.

பொதுவாக இன்டஸ்ட்ரியில் டாப்பில் இருக்கிற ரஜினி, கமல், விஜய், அஜீத் போன்ற நடிகர்களும், ஷங்கர் மணிரத்னம் போன்ற இயக்குனர்களும் தங்கள் பிரச்சனைகளை வீட்டிலிருந்தபடியே சரி செய்து கொள்வார்கள். ஆனால் ஷங்கர் நேரடியாகவே தயாரிப்பாளர் சங்கத்திற்கு வந்தார் என்றால், அதன் வீரியம் எப்படியிருக்கும்? தகவலை கேள்விப்பட்ட விஷால் ஓடோடி வந்தாராம் சங்கத்திற்கு.

நடந்த கதை அத்தனையையும் விஷாலிடம் விவரித்த ஷங்கர், “இந்தப் படத்தால் எனக்கு பல கோடிகள் நஷ்டம். போனால் போகட்டும்… வடிவேலுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சுமார் இரண்டரை கோடி பணத்தை திரும்ப வாங்கிக் கொடுங்க. நான் வேறோரு ஹீரோவை வைத்து இந்தப்படத்தை முடித்துக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறாராம்.

நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலுக்கு உறுதுணையாக நின்றவர் வடிவேலு. தொழில் நேர்மைக்கும், வகிக்கிற பதவிக்கும் பெருமை சேர்க்கிறவர் விஷால். விருப்பு வெறுப்பை ஒதுக்கி வைத்துவிட்டு தீர்ப்பு சொல்ல வேண்டிய இக்கட்டில் இருக்கிறார் விஷால்.

எப்படி தீரப்போகிறதோ இந்த பிரச்சனை?

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About