பக்கவாதத்தால் முடங்கிப்போன உடல்... ஒற்றை விரலில் உருவான புரூக்ளின் பாலம் - சாதனைக் கதை!

`ஒருவர் முயற்சி என்ற ஒன்றை மட்டும் கையில் எடுத்துவிட்டால், அவரால் செய்ய முடியாதது ஒன்றுமில்லை.’ இந்த வாசகத்தைச் சொன்னவர் சாதாரண ஆள் கிடையாத...

`ஒருவர் முயற்சி என்ற ஒன்றை மட்டும் கையில் எடுத்துவிட்டால், அவரால் செய்ய முடியாதது ஒன்றுமில்லை.’ இந்த வாசகத்தைச் சொன்னவர் சாதாரண ஆள் கிடையாது. உலகின் பல நாடுகளைத் தன் வீரத்தாலும், புத்திசாலித்தனத்தாலும், படைபலத்தாலும் வென்ற மாவீரர் அலெக்ஸாண்டர். `இது சாத்தியமில்லை’, `இதை யாராலும் செய்ய முடியாது’ எனப் பலர் கைவிட்ட அரிய செயல்களை சிலர் தங்கள் திறமையாலும், அர்ப்பணிப்பு நிறைந்த உழைப்பாலும் சாத்தியமாக்கியிருக்கிறார்கள். அவர்களைப் போற்றும் சரித்திரச் சின்னங்களாக இன்றைக்கும் சில அற்புதமான கட்டடங்கள், தேவாலயங்கள், அரண்மனைகள்... என எத்தனையோ உலகமெங்கும் நிறைந்திருக்கின்றன. அவற்றில் ஒன்று, அமெரிக்கா, நியூயார்க்கில் பார்ப்பவர்களை பிரமிக்கவைக்கும்படி நீளமாகக் காட்சியளிக்கும் `புரூக்ளின் பாலம்.’ இதை வடிவமைத்து, கட்டி முடித்தவர்களின் கதை நம்மைக் கலங்கவைப்பது. அந்தக் கதையில் அப்படி என்ன விசேஷம்... பார்க்கலாமா? 

புருக்ளின் பாலம்

அவர் பெயர் ஜான் அகஸ்டஸ் ரோப்ளிங் (John Augustus Roebling). ஜெர்மனியில் பிறந்து அமெரிக்காவில் செட்டிலான பிரபல இன்ஜினீயர். `சஸ்பென்ஷன் பிரிட்ஜ்’ (Suspension Bridge) என்று பொறியியல் துறையில் சொல்வார்கள். அந்த வகை பாலங்கள் சிலவற்றை அமெரிக்காவில் சிறப்பாக வடிவமைத்து, கட்டிக்கொடுத்து நல்ல பெயர் எடுத்திருந்தார் ஜான்.  1863-ம் ஆண்டு அவருக்கு ஒரு யோசனை பிறந்தது. நியூயார்க்கின் மன்ஹாட்டனுக்கும் புரூக்ளினுக்கும் நடுவில் `ஈஸ்ட் ரிவர்’ (East River) ஓடிக்கொண்டிருந்தது. `அதற்கு மேல் கண்ணைக் கவரும் பாலம் ஒன்றைக் கட்டினால் என்ன?’ என்று நினைத்தார். நினைத்ததை தன் சக பொறியாள நண்பர்களிடம் பகிர்ந்தார். கேட்டவர்கள் அவரைக் கேலி செய்தார்கள். `இதை மறந்துடுங்க’, `அப்படி ஒரு பாலத்தைக் கட்டவே முடியாது’ என்றார்கள்.

`சாத்தியமில்லை’ என்று பிறர் சொல்வதை சாத்தியப்படுத்தும் வேட்கை கொண்டவர் ஜான். அந்தப் பாலத்தைக் கட்டி முடித்தே தீருவது என்கிற முடிவுக்கு வந்தார். அவருடைய மகன் வாஷிங்ட்ன் ரோப்ளிங். அவரும் ஒரு இன்ஜினீயர்தான். மகனை அழைத்தார். விஷயத்தைச் சொன்னார். முடிவாக ``அந்தப் பாலத்தை எப்படியாவது கட்டி முடித்தே ஆக வேண்டும்’’ என்றார். இருவரும் நாள் கணக்கில் விவாதித்தார்கள். மன்ஹாட்டனுக்கும் புரூக்ளினுக்கும் போய்வந்தார்கள். ஈஸ்ட் ரிவரை அங்குலம் அங்குலமாக அலசினார்கள். அந்தப் பாலத்தை எப்படிக் கட்டுவது... அதனால் ஏற்படும் இடர்கள் என்னென்ன... அவற்றை எப்படிக் களைவது? - எல்லாவற்றையும் பேசித் தீர்த்தார்கள்.

புரூக்ளின் பிரிட்ஜ்

ஜானின் கனவுப் பாலம் நனவாகும் அந்த நாள் வந்தது. அது, 1869-ம் ஆண்டு. வேலை செய்ய ஆட்களைத் திரட்டினார்கள்; வேண்டிய உபகரணங்கள், தளவாடங்கள் அனைத்தையும் சேகரித்தார்கள். களத்தில் இறங்கினார்கள். `ஈஸ்ட் ரிவர்’ என்கிற அந்த நதியின் மேலாக ஜான் கற்பனையாலேயே அந்தக் கனவுப் பாலத்தைக் கட்டிப் பார்த்தார். பாலம் கட்டும் வேலை ஆரம்பமானது.

வேலையை ஆரம்பித்து சில மாதங்கள்கூட ஆகியிருக்கவில்லை. பாலம் கட்டுமிடத்தில் ஒரு விபத்து... அல்ல... துயரம். ஜான் ஒரு கப்பல் துறையின் மேடை விளிம்பில் நின்றுகொண்டிருந்தார். அப்போது வேகமாக துறைமுகத்தை நோக்கி வந்த ஒரு சிறு வணிகக் கப்பல் (Ferry) மோதியதில் அவர் கால் விரல்களில் படுகாயம். கிட்டத்தட்ட கூழாகிப் போயின விரல்கள். மருத்துவர்கள், `கால் விரல்களை எடுத்துவிட வேண்டும், இல்லையென்றால் ஆபத்து’ என்று சொல்லிவிட்டார்கள். விரல்களை அறுவைசிகிச்சை செய்து அகற்றினார்கள். மேற்கொண்டு மருத்துவ சிகிச்சைக்கு ஒப்புக்கொள்ளவில்லை ஜான். `வாட்டர் தெரபி’ என்று ஏதேதோ மாற்று வைத்தியம் செய்து பார்த்தார். அவருடைய உடல்நிலை நாளுக்கு நாள் கவலைக்கிடமானது. `டெட்டானஸ்’ (Tetanus - தசைகளில் ஏற்படும் ஒருவகைத் தொற்று) என்றார்கள் மருத்துவர்கள். பிறகு என்ன சிகிச்சை கொடுத்தும் கேட்கவில்லை. அந்த விபத்து நடந்து வெறும் 24 நாள்களிலேயே இறந்து போனார் ஜான்.

ஜானின் மகன் வாஷிங்டனின் கைக்கு புரூக்ளின் பாலம் கட்டும் பொறுப்பு வந்தபோது அவருக்கு 32 வயது. அப்பாவின் மரணம், வாஷிங்டனைக் கொஞ்சம் உலுக்கித்தான் போட்டது. இருந்தாலும், அப்பாவின் லட்சியம் அவருக்கு நினைவுக்கு வந்தது. ஆனால் தொடர்ந்து பல பிரச்னைகள், இன்னல்கள், தடைகள் பாலம் கட்டுவதில் ஏற்பட்டுக்கொண்டே இருந்தன. பாலத்தின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. அது, வாஷிங்டனையும் விட்டுவைக்கவில்லை. ஆரம்பத்தில் வாய்வு தொடர்பான `கேய்ஸன் நோய்’ (Caisson Disease), `டிகம்ப்ரெஷன் நோய்’ (Decompression sickness) என்றார்கள். ஆனால், அந்த நோய் வாஷிங்டனைப் படுத்தி எடுத்துவிட்டது. ஒரு கட்டத்தில் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு, பக்கவாதம் வந்தது. அதன் விளைவாக அவரால் வாய் பேச முடியவில்லை; நடக்க முடியவில்லை. `அவ்வளவுதான் புரூக்ளின் பிரிட்ஜ் பிராஜக்ட்’ என்ற முடிவுக்கே வந்துவிட்டார்கள் விஷயத்தைக் கேள்விப்பட்டவர்கள். ஏனென்றால், ஜானுக்கும் அவர் மகன் வாஷிங்டனுக்கும்தான் அந்தப் பாலத்தை எப்படிக் கட்டி முடிக்க வேண்டும் என்பது தெரியும். அப்பா இறந்துவிட்டார்; மகன் நடைப்பிணம். பிறகு எப்படி பாலத்தைக் கட்டுவார்கள்?

நடமாட்டமில்லை, பேச முடியவில்லை. ஆனால், வாஷிங்டனுக்கு எப்படியாவது பாலத்தைக் கட்டி முடித்துவிட வேண்டும் என்கிற வேட்கை இருந்தது. தான் நினைப்பதை ஒருவர் புரிந்துகொண்டால் போதும். அதை அவர் மற்ற இன்ஜினீயர்களுக்கு தகவல் பரிமாற்றம் செய்யலாம். அவர்கள் தான் நினைத்ததைச் செய்துவிடுவார்களே! என யோசித்தார். அந்தத் தகவல் பரிமாற்றத்துக்கு உதவ தன் மனைவியையே தேர்ந்தெடுத்தார் வாஷிங்டன். அப்போது அவரால் ஒரு கையைத்தான் உயர்த்த முடிந்தது. அதிலும் ஒரு விரல்தான் லேசாக செயல்பட்டுக்கொண்டிருந்தது. அந்த விரலால் தன் மனைவியின் கையைத் தொடுவார். அந்தத் தொடுகை மூலமாக அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை கேட்டுக் கேட்டு அவர் மனைவி புரிந்துகொள்ள ஆரம்பித்தார். அது வரை யாரும் கேள்விப்பட்டிராத `பிறரின் கையை விரலால் தொட்டுத் தொட்டுச் சொல்லும்’ சங்கேத மொழி.

வாஷிங்டனின் மனைவி எமிலி வெகு சீக்கிரமே அந்த மொழியைக் கற்றுக்கொண்டார். கணவர் சொன்னதை மற்ற இன்ஜினீயர்களுக்கு எடுத்துச் சொன்னார். மறுபடியும் பாலம் கட்டும் வேலை வேகமெடுத்தது. எமிலி, வாஷிங்டன் ரோப்ளிங்குக்கு 11 வருட காலம் உதவினார். பாலம் சிறப்பாகக் கட்டி முடிக்கப்பட்டது. 1869-ம் ஆண்டு தொடங்கிய பணிகள், 1883-ம் ஆண்டு முடிவடைந்தன. கிட்டத்தட்ட 14 அண்டுகள். அமெரிக்காவே அந்தப் பாலத்தை ஆச்சர்யத்தோடு பார்த்தது. முடியாது என்றதை முடியும் என்றார் தந்தை; முடித்தே காட்டிவிட்டார் மகன். கண்ணைக் கவரும் அந்த `புரூக்ளின் பாலம்’ கம்பீரமாக இன்றும் நிமிர்ந்து நிற்கிறது. அந்த அப்பா, மகனின் மன உறுதிக்கும், நம்பிக்கைக்கும் எடுத்துக்காட்டாக!

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About